கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 11 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினுக்கு கடந்த 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது. இதனையடுத்து அவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கேரளாவிற்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் அஸ்வின் ஆசிட் திரவம் உட்கொட்டதாகவும் அதனால் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் அஸ்வினிடம் கேட்டபோது பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் அந்த பள்ளியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மாணவர் கூல்டிரிங்ஸ் கொடுத்ததாகவும் அதை குடித்த பிறகு உடைநிலை சரியில்லாத போனதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து களியக்காவிளை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக சிறுவனின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் இன்று தற்போது சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் நெய்யாற்றிங்கரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.