தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று முன்தினம் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்சர்) 71* ரன்கள் குவித்தார். மேலும் வனிந்து ஹசரங்கா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 36(21) ரன்களும், தனஞ்செயா டி சில்வா 28(21) ரன்களும் எடுத்தனர்..
இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இருவரும் களமிறங்க, மதுஷன் வீசிய 4ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் பக்கர் ஜமான் 0 ரன்னில் ஆட்டம் இழந்ததால் பாகிஸ்தானுக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது.. 22/2 என பரிதவித்த அந்த அணிக்கு 3ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது.
வழக்கம்போல முகமது ரிஸ்வான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு ஜோடியாக இப்திகார் அகமது (32 ரன்கள்) போராடி ஆட்டம் இழந்தார். மேலும் முடிந்தவரை போராடி பொறுமையாக ஆடிய முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 55(49) ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. அதன்பின் வந்த வீரர்களும் வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து பாகிஸ்தான் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஏனென்றால் ஐசிசி தரவரிசை பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் அந்த அணி இளம் படைகளை வைத்து முக்கிய போட்டியில் தைரியமாக விளையாடி 6ஆவது முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கி உள்ளது. இலங்கை அணி கோப்பையை வென்றதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஆசியக்கோப்பையை வென்ற இலங்கைக்கு வாழ்த்துக்கள்.. போட்டியில் ஒரு பின்தங்கிய நிலையில் இருந்த அவர்கள் தங்கள் சுத்த துணிச்சல், பெரிய தருணங்களில் போட்டியை கைப்பற்றுவதில் தைரியம் மற்றும் முக்கியமாக அவர்கள் காட்டிய அற்புதமான குழு பிணைப்பு ஆகியவற்றால் வெற்றி பெற்றனர். இந்த வெற்றி தங்கள் நாட்டு மக்களுக்கு புன்னகையை வரவழைக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்..
Congrats to @OfficialSLC for winning Asia Cup – T20 in style
As an underdog in the tournament, they emerged victorious by their sheer grit, braveness in seizing big moments & importantly, the amazing team bonding they showed.
Hope this win brings smiles to their countrymen. pic.twitter.com/BnPtKcRebA
— K.Annamalai (@annamalai_k) September 12, 2022