ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்லுமா என்ற சந்தேகம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது. இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். அதற்கான 4 வாய்ப்புகள் இருக்கிறது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் இந்தியா தோல்வி அடைந்ததால், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இறுதி ஆட்டத்திற்கு செல்ல முடியும் என்ற சூழல் இருந்தது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ராகுல் 6 ரன்களில் அவுட் ஆனார்.
அதன்பின் களம் இறங்கிய விராட் கோலி டக் அவுட் ஆகினார். இதனையடுத்து விளையாடிய ரோகித் சர்மா 72 ரன்களும், சூரியகுமார் யாதவ் 32 ரன்களும், ரிஷப் பண்ட் 17 ரன்களும், ஹுடா 3 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து விளையாடிய அஸ்வின் 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. அதன்பின் களம் இறங்கிய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் விளையாடும் ஒவ்வொரு அணிகளும் 3 அணியுடன் மோதும் போது எந்த அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெறுகிறதோ அந்த அணி எவ்வித தடங்களும் இல்லாமல் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி விடும்.
இந்த சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் கண்டிப்பாக இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி விடும். இன்று நடைபெற இருக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மேட்சில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதியாகிவிடும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி விட்டால், இந்தியா ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டும். இதேபோன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும். அதோடு நெட் ரன் ரேட் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இருக்க வேண்டும். மேற்கூறிய 4 நடந்தால் இந்தியாவால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.