மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவி வெள்ளத்துக்கோட்டை கிராமத்தில் சாமியாரான முனுசாமி என்பவர் நடத்தி வரும் ஆசிரமத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி அந்த மாணவி திடீரென ஆசிரமத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முனுசாமி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் முனுசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.