ஆசிரமத்தில் வைத்து விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செம்பேடு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி, ஹேமாமாலினி என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இதில் ஹேமாமாலினி தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மகேஸ்வரிக்கு ஜெகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் வெள்ளாத்துகோட்டை கிராமத்தில் வசிக்கும் நாட்டு வைத்தியரான முனுசாமி என்பவரது ஆசிரமத்தில் மகேஸ்வரி சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாத ஹேமமாலினியும் ஆசிரமத்திற்கு சென்று தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் ஆசிரமத்தில் வைத்து ஹேமாமாலினி திடீரென பூச்சி மருந்தை குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக ஹேமமாலினியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹேமாமாலினி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து ஹேமமாலினியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் ராதாகிருஷ்ணன் தனது மனைவியான நிர்மலா மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மகளின் சாவுக்கு காரணமாக இருந்த ஆசிரம சாமியார் முனுசாமி மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் காலில் விழுந்து கதறி அழுதுள்ளனர். அதன்பின் மாவட்ட ஆட்சியர் அவர்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.