ஆசிரியரின் வருகை பதிவில் புதிய முறையை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடக்கத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் உதவி மூலமாக ஆசிரியர்களின் வருகை ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யப்பட்டு வந்தது. அதன் பின் மாநிலம் வாரியாக செயலிகளை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வருகையை பதிவு செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக ஆசிரியர்கள் சரியான நேரத்தில் தங்களுடைய கைரேகையை பள்ளிக்குள் வரும்போதும் பள்ளியை விட்டு வெளியேறும் போதும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு என்று புதிய வருகை பதிவேடு முறை ஜார்கண்ட் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் இ வித்யா வாஹினி செயலி மூலமாக தங்களது வருகையை பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அதற்கு பதிலாக தற்போது ஜியோ பென்சிங் எனும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் 100 மீட்டர் வரம்புக்குள் இருந்தால் தானாகவே அவர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது. அப்போது பச்சை நிறத்தில் ஸ்மார்ட் போனில் ஒளி தென்படுகிறது. அதேபோல் அவர்கள் பள்ளியில் இல்லாத சமயத்தில் ஸ்மார்ட் ஃபோன்களில் சிவப்பு நிற ஒளி தோன்றுகிறது. 2023 ஜனவரி மாதம் முதல் இந்த புதிய வருகை பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.