அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியானவர்களின் விவரங்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்துள்ளது. நடப்பாண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பதவி உயர்வு பெற தகுதியுள்ள ஆசிரியர்களின் விபரங்களை வரும் 27ம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்ற இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் விவர பட்டியலை தயாரித்து துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி பாடவாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும்.
இதில் இரட்டைப்பட்டம் பெற்றவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள், புகார்கள் நிலுவையில் உள்ளவர்களை பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க கூடாது எனவும் அதே நேரம் தகுதியானவர்களின் பெயர் விடுபட்டு விடக்கூடாது. மேலும் பெயர் விடுபட்டதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பொறுப்பை ஏற்க வேண்டும். ஆகவே இதில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த பணிகளை முடிக்க வேண்டும். வரும் 27ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில் தங்கள் கையொப்பத்துடன் கூடிய பட்டியலை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.