அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி திராவக மாடல் ஆட்சியாக மாறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மூடிய திமுக அரசு ஊழல் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல் வளையை நெரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை, மாணவர்களின் கல்வி கடன் ரத்து போன்ற எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாத திமுக அரசு சொத்து வரி மற்றும் மின் கட்டண வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது.
தாலிக்கு தங்கம் திட்டம், மகளிருக்கு இரு சக்கர வாகன திட்டம் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களுக்கு மூடு விழா கண்ட இந்த அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளது. இதை கண்டித்து வருகிற 16-ஆம் தேதி தமிழக முழுவதும் மாபெரும் கண்டனப் போராட்டம் அதிமுக கட்சியின் சார்பில் நடைபெறும். அதிமுக கட்சிக்காக தீவிர களப்பணி ஆட்சி வரும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் திமுக அரசு ஒரு நாடகத்தை நடத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டுள்ளார். ஏற்கனவே சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் 3-வது முறையாக சோதனை நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது வழக்கு தொடர்ந்த தனியார் அமைப்புகள் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி வாய்தா மேல் வாய்தா வாங்குவதில் இருந்தே பொய் புகார் தான் கொடுத்துள்ளார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரிகிறது. திராவிட அரசுதான் நேர்மையான அரசு என்று தமிழக முதல்வர் மார்தட்டி கொள்கிறார். அது உண்மையாக இருந்தால் உச்ச நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கி வழக்கை விரைந்து நடத்துங்கள் பார்க்கலாம். இதேபோன்று திமுகவின் முன்னாள் மற்றும் இப்போதைய அமைச்சர்கள் 13 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள முறைகேடுகளை விசாரித்து தண்டனை வாங்கி தருவாரா முதல்வர்.
தற்போது தமிழகத்தில் நில அபகரிப்பு செய்யும் தனக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர். தங்களுடைய அமைச்சர்களை காப்பாற்றுவதற்காக பல வழக்குகளை விசாரிக்காமல் நிலுவையில் போட்டு வாய்தா மேல் வாய்தா வாங்கி யோக்கியம் பேசும் இந்த முதல்வர் எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல திட்டங்களுக்கு மூடு விழா காண்பதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் போடுவதை நிறுத்திவிட்டு, தன்னுடைய ஏவல் துறை மூலம் பழிவாங்கும் நோக்கத்தை கைவிட்டு விட்டு கொடுத்த வாக்கை நிறைவேற்றி இனியாவது தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில சுயநலம் பிடித்த சக்திகளோடு இணைந்து அதிமுகவை அழிக்க நினைப் பவர்களுக்கு திமுக அரசு உதவி செய்கிறது.
ஆனால் இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொண்டு உங்கள் திட்டங்களை எல்லாம் தவிடு பிடியாக்கிவிடுவோம். கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்துவதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. திமுக அமைச்சர்கள் போன்று நாங்கள் சந்து பொந்துகளில் நுழைய மாட்டோம். மேலும் காவல் துறையினர் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படாமல் நடுநிலையாக நின்று சட்டத்தின்படி சமநிலையோடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.