பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 2 பேரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்று வரும் 2 மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதுபோல் இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியானது.இதனை பார்த்த பல்வேறு அமைப்பினரும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி ஆசிரியை சுதா ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.