உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தைத் தொட்ட காரணத்திற்காக தலித் மாணவனை வகுப்பறையில் அடைத்துவைத்து உலோக கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நாக்ரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரனௌபூரிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது. 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவின் இருசக்கர வாகனத்தைத் தொட்டுப்பார்த்துள்ளான். இதன் காரணமாக கோபமடைந்த ஆசிரியர் மாணவனை வகுப்பறையில் அடைத்து வைத்து உலோக கம்பி மற்றும் துடைப்பத்தால் தாக்கி கழுத்தை நெரித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளியின் மற்ற ஊழியர்கள் மாணவனை மீட்டனர். அதன்பின் மாணவன் நடந்ததைப் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் அளித்த புகாரின்படி ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கோபமடைந்த மாணவரின் குடும்பத்தினர் சனிக்கிழமை பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதாக பள்ளி நிர்வாகம் குடும்ப உறுப்பினர்களுக்கு உறுதியளித்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.