ஈரோடு மாவட்டத்தில் உள்ள செண்பகபுதூரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கோமதி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கோமதி தனது இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீடு எடுத்து தனியாக குடியேறினார்.
நேற்று முன்தினம் கிருஷ்ணகுமாரின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அறிந்த கோமதி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது கணவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோமதி உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.