சென்னை அரசு பள்ளியில் ஆசிரியை அடித்து மாணவன் கண்பார்வை பறிபோனது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர்கள் வேலு-ரேகா தம்பதியினர். வேலு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகனான கார்த்திக்(வயது 14), மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் தமிழ் ஆசிரியரியாக பணிபுரியும் பெண் ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் கார்த்திக்கின் தலையில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சிறிது தினங்களில் அவருக்கு பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் மருத்துவரை சந்தித்த போது, மாணவரின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் அவரது கண் சற்று வெளியே வந்துள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
ஆனால் எதிர்பாராத விதமாக மாணவர் கார்த்திக்கின் இடது கண் பார்வை பறிபோயுள்ளது. மேலும் அவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தக்கசிவு தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவர் கார்த்திக் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாணவர்களுக்கு பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனை வழங்குவதை, தடுக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வி துறை செயலாளர், பள்ளிக்கல்வி துறை இயக்குனர் பதிலளிக்குமாறு கூறியுள்ளது. தனது மகனின் இந்த நிலைமைக்கு காரணமான அந்த பெண் ஆசிரியையை கைது செய்ய வேண்டும் கார்த்திக்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.