14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை கடந்த 12-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் மாயம் என்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது அவர் வாலிபர் ஒருவரிடம் அடிக்கடி பேசி வந்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பொள்ளாச்சி அருகில் மயிலாடுதுறை வசித்துவந்த ஓட்டுநரான தினகரன்(20) என்பது தெரியவந்துள்ளது. சிறுமியிடம் பேஸ்புக் மூலம் தினகரனுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். அதனை தொடர்ந்து சிறுமியிடம் ஆசையாக பேசி தினகரன் அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் கடந்த 13 ஆம் தேதி அன்று சிறுமியை திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தினகரனை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.