கர்நாடகா மாநிலம் குனிகெரி கிராமத்தில் ஹுச்சம்மா சௌத்ரி என்பவர் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது கணவர் பசப்பா சௌத்ரி 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து ஹுச்சம்மா சௌத்ரி வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் கிராமத்தில் உள்ள சிறுவர்களுக்காக பள்ளி கட்டுவதற்கு இடம் தேடப்பட்டு வந்தது.
இதனை அறிந்த மூதாட்டி ஹுச்சம்மா உடனடியாக அவர்களைச் சந்தித்து ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கினார். அதன்பின் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்காக மீதி இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் வழங்கினார். இவ்வாறு பள்ளிக்காக நிலத்தை வழங்கியதால் ஹுச்சம்மா அப்பள்ளியில் தற்போது மதிய உணவு சமைக்கும் வேலையைச் செய்து வருகிறார்.
இது தொடர்பாக பேசிய ஹூச்சம்மா “எனக்குக் குழந்தை இல்லை. கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் என்னை ஆச்சி என்று அழைக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்காக எனது நிலத்தைக் கொடுத்துவிட்டேன். பணத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்…? இந்தக் குழந்தைகள் எப்போதும் என்னை நினைவில் வைத்துக் கொள்வார்கள். அதுவே எனக்கு போதும்” என்று தெரிவித்துள்ளார்.