Categories
ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?…. இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க……!!!!

காவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும். தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள். திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர்.

அன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு.

சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள்.

அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர். காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக ஆடி பெருக்கு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ஆனாலும் புனித நீராடமுடியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்யும். ஆனால் மக்கள் கவலைப்பட வேண்டாம். எல்லோரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு இன்று கொண்டாடுவோம்.

Categories

Tech |