ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், ஆடி அமாவாசை திருநாள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வரும் 28ஆம் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வருகிற 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. தணிப்பாறை அடிவார பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி கோவில் வளாகத்தில், அடிவாரப் பகுதியான தணிப்பாறையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சதுரகிரி மலைக்கு படையெடுத்துள்ள காரணத்தினால் வெளிமாவட்டங்களில் இருந்தும் 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதோட ஆயிரக்கணக்கான தனியார் வாகனங்களும் வந்து செல்லும் வகையில் தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு வருகின்றது.