ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதம் என்று கூறப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு. இந்த மாதத்தில் உலகமெங்கும் மகா சக்தியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை, ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி ஆசீர்வதிப்பது மிகவும் சிறப்பானது. இந்த ஆடி மாதத்தில் இதுவரை வந்த வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் பூஜித்து அம்பாள் வழிபாடு செய்திருந்தாலும், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று அவசியம் பூஜை செய்யுங்கள். பராசக்தி வழிபாடு செய்யுங்கள்.
அம்பாளுக்கு உகந்த செந்நிற மலர்களை சாத்தி, உங்கள் வீட்டில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அப்படி செய்யாவிட்டாலும் நெய்விளக்கேற்றி, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அம்மனுக்கு பூஜை செய்யுங்கள். தேவிக்கு தீப தூப ஆராதனை செய்து, பால் பாயசம், கேசரி, சக்கரை பொங்கல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் குடுங்கள். உங்களால் முடிந்தால் சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, புடவை, ஜாக்கெட், வளையல், குங்குமம், மஞ்சள் வைத்து வழங்குங்கள். இப்படி செய்யும் பொழுது அம்மனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.