திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி தி.மு.க. வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஏ.பி.காலனி, கே.கே.நகர், திருவள்ளுவர் சாலை, நகாணம்பட்டி, காந்திநகர், வள்ளுவர் நகர், சத்யாநகர் ஆகிய இடங்களில் உதய சூரியனுக்கு வாக்களிக்குமாறு வேனில் சென்று வீடு, வீடாக வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது;-
என்னை கடந்த 5 முறை வெற்றிபெற வைத்ததற்கு கோடான கோடி நன்றிகளை முதலில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. சார்பில் தற்போது 6-வது முறையாக நான் போட்டியிடுகிறேன். என்னை இந்த முறையும் நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் நான் கொண்டுவரப்பட்டது. 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கப்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் உழவர் பேரங்காடி அமைக்கப்பட்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கான நலத்திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுவை ஏற்படுத்தியது என எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன். மேலும் தாராபுரம், பழனி சாலை உள்ளிட்ட இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ. 70 கோடியில் ஒட்டன்சத்திரம் சின்னகுளத்தை தூர்வாரி பூங்கா அமைப்பதற்கு அனுமதி பெற்றது என சொல்லிக்கொண்டே போகலாம். ஒட்டன்சத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி, இந்த முறையும் நான் எம்.எல்.ஏ.வாக பெற்றவுடன் நிறுவப்படும். தனி குப்பைக்கிடங்கு, மார்க்கெட்டிற்கு குளிர்சாதன கிடங்கு, நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், பரப்பலாறு அணையை தூர் வாருதல், வேலை வாய்ப்புகளை மேம்படுத்த தொழிற்பேட்டை ஆகிய திட்டங்களை கட்டாயம் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளிக்கிறேன். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு டவுன் பேருந்தில் இலவச பயணம், கொரோனா நிவாரணம், மாதாந்திர உதவித்தொகை என மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் தி.மு.க. வெற்றி பெற்றால் மட்டுமே உங்களால் நிறைவேற்ற முடியும். எனவே உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.