திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து மக்களுக்கு செய்து வருகிறது.
இதற்கு மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார். அதன்படி இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாளே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பிரச்சனைகளுக்கு 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் தீர்வு எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.