திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத ஊராட்சி மன்ற துணை தலைவர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தில் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில், ராஜேஸ்வரி நேற்று மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து அழுதுள்ளார். இதை பார்த்து பதறிப்போன ஆட்சியர் ஸ்ரீதர், ராஜேஸ்வரியை அழைத்து சென்று விசாரணை செய்துள்ளார்.
அந்த விசாரணையில் துணைத் தலைவி ராஜேஸ்வரி, கடந்த 5-ஆம் தேதி தியாகதுருகம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும், எங்கள் வீட்டிற்கு வந்து சண்டை போட்டனர். மேலும் என் ஆடைகளைக் கிழித்து அலங்கோலம் செய்தனர். அவர்களைத் தடுத்த என் கணவர் அவருடைய தம்பி மற்றும் உறவினர்களையும் தாக்கினர். தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர்கள், அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஊராட்சி மன்ற தலைவரால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் வீடு புகுந்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.