ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தற்போது 33 மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் ஏழு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையை பொருத்தவரை நாற்பதில் இருந்து 60 வயதிற்கு உட்பட்ட மூன்று நபர்களுக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் ஆவார்.
மேலும் இந்த வைரஸை பொருத்தவரை பரவும் வேகம் அதிகமாக உள்ளதாலும் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்ற காரணத்தாலும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வல்லுனர்கள் அடிக்கடி எச்சரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்படும் எனவும் மேலும் மீறி செல்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பை போலீசார் தரப்பில் கூறுகையில் தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்கும் என கூறியுள்ளனர். எனவே பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமெனவும் அதில் கூறப்பட்டுள்ளது.