பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து அணிக்கும், முதலமைச்சர் அமரீந்தர் சிங் அணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சண்டிகரில் அமைச்சர் திரிப்த் ரஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்காரியா , சுக்ஜிந்தர் சிங் ரன்தவா மற்றும் சரண்ஜித் சிங் மற்றும் 28 எம்எல்ஏக்கள், பஜ்வாவின் இல்லத்தில் கூடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைமையை நேரில் சந்தித்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை நீக்குமாறு வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் யாரை அடுத்த முதலமைச்சராக முன்நிறுத்துவது என்பது குறித்து இவர்கள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
அமரீந்தர் சிங், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால், வரும் தேர்தலில் சிக்கல் வரும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கட்சியின் ஆலோசகர்கள் இருவர் பாகிஸ்தான் ஆதரவு கருத்துகள் தெரிவித்ததால், மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கு எதிராக, அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் குரலெழுப்பிவருகிறார்கள். சட்டமன்றத்தேர்தல் நெருங்கிவரும் சூழலில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.