மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் சட்டப்பேரவையில் விவாதிக்கவில்லை என்று மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் மூன்று நாட்கள் மட்டுமே கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக கோரிய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தனவா ? ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம், முதலீட்டாளர்கள் மாநாடு-முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஈர்த்த முதலீடுகள் வேலைவாய்ப்புகள் எவ்வளவு? ஜல் ஜீவன் மிஷன் திட்ட முறைகேடுகள், ஊராட்சி மன்றங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்காதது, மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி பாக்கி, மாநில அரசின் கடன் சுமை 4.56 இலட்சம் கோடி பற்றி விவாதிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்து, டெல்லி எஜமானர்களின் உத்தரவுபடி கையெழுத்திட்டதாலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழைத்தது பழனிச்சாமி அரசு- ஆனால் இவற்றை மறைத்து சட்டப்பேரவையில் ஆவேசம் காட்டுகிறார் முதலமைச்சர்.
டெல்டா பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடர்கின்றன; வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்க 2023 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கி இருக்கிறது- ‘விவசாயி’ வேடம் போடும் முதல்வர் வாய் திறக்கவில்லை.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகியன விவசாயிகளின் வாழ்வுக்கு எதிரானது என போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் பாராட்டி ஆதரித்திருக்கிறது பழனிச்சாமி அரசு.
முதுநிலை அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்காதது. இவற்றை பற்றி எல்லாம் விவாதிக்காமல், சட்டப்பேரவையில் ஆவேச குரல் எழுப்பி, அட்டை கத்தி சுழற்றும் நாடகம் அதிக காலம் நீடிக்காது. ஆட்டம் முடியும்.. ஆறு மாதத்தில் விடியும்! என்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.