திருடிய ஆட்டை திருப்பி கேட்டதால் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கண்ணன்புதுவன் கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான சுப்பிரமணி என்பவர் தனது வீட்டில் வெள்ளாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் அவரது ஆடு ஒன்றி திருடி சென்றுள்ளார். இதனையறிந்த சுப்பிரமணி சத்தியமூர்த்தியிடம் சென்று ஆட்டை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி கீழே கிடந்த கட்டையை எடுத்து சுப்பிரமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுப்பிரமணியை மீட்டு கடலாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.