Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி லஞ்சம் வாங்கிய எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

 வாகன தணிக்கையின் போது ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி லஞ்சம் வாங்கிய கன்னங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகிய இருவரையும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், தலைமை காவலர் கணேஷ் ஆகியோர் ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில், கடந்த மாதம் 28ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்காடு மலை அடிவார பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது ஆட்டோவை ஓட்டி வந்தார்.

ஆட்டோவை நிறுத்திய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், தலைமை காவலர் கணேஷ் ஆகியோர் பிரகாஷிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கேட்டுள்ளனர். இதற்கு ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், வண்டியில் ஆர்.சி. புத்தகம் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது தலைமை காவலர், ‘உன் மீது மூன்று வழக்கு தற்போது போடப் போகிறேன், இதற்கு அபராதம் கட்ட வேண்டும்’ என ஆட்டோ ஓட்டுநரிடம் மிரட்டும் தொணியில் தெரிவித்திருக்கிறார். அதற்கு, ஆட்டோ ஓட்டுநர், ‘நான் நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்துகிறேன் எனக்கூறி, ஆட்டோவை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.900 லஞ்சமாக வேண்டும் என தலைமைக் காவலர் கேட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பிரகாஷ், தன்னை விட்டு விடுமாறு பலமுறை கூறியும் காவலர்கள் இருவரும் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரை பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், தன்னிடமிருந்த ரூ.600 பணத்தை காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியத்திடம் வழங்கி சென்றார். இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இதையறிந்த சேலம் மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார், காவல் நிலைய உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதில் காவலர்கள் இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதியானதை அடுத்து, இன்று இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |