ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸ் சூப்பிரண்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆட்டோ டிரைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அவர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்து இல்லாமல் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு முறப்பநாடு பகுதியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்றதால் தான் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் எனவும் கூறினார். அந்த 4 வயது குழந்தை பள்ளிக்கு சென்ற முதல் நாளிலிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். எனவே அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஆட்டோவில் யாரும் ஏற்றி செல்லாதீர்கள் என்றார்.
அதன்பிறகு மது அருந்திவிட்டு மற்றும் செல்போன் பேசிக்கொண்டு யாரும் வாகனங்களை ஓட்டக்கூடாது என்றார். இந்த நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அதை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் அந்த தகவல்களை 100 என்ற எண்ணுக்கும், 9514144100 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஓட்டுநர்களிடம் தெரிவித்தார்.