Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்களும் உயர போகுது?…. ஐகோர்ட் புதிய அதிரடி உத்தரவு…..!!!!!!

தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என்று சென்ற 2013ஆம் வருடம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தும்படி உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில் அதிககட்டணம் வசூலித்து பயணிகள் ஏமாற்றப்படுவதை தடுப்பதற்கு ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது குறித்து அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சென்ற 2013ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பிரிண்டர் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அதை பொருத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தி இருந்தாலும் அவை செயல்படுவதில்லை எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடம் தங்களது விருப்பம் போல கட்டணம் வசூலிப்பதாகவும் குறை தெரிவித்தார். இதனையடுத்து மீட்டர் பொருத்தி இருந்தும் அதை செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்துதுறையும், காவல்துறையும் திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனிடையில் மீட்டரை செயல்படுத்தாத ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பெட்ரொல் – டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால் அவற்றின் விலைபடி ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க நீண்ட நடவடிக்கையை பின்பற்றாமல் பெட்ரோல் – டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாற்றும் அடிப்படையில் மென்பொருளை பயன்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் அரசுக்கு யோசனை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Categories

Tech |