ஓட்டுநர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரி பகுதியில் விக்கி (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பிய விக்கி மற்றும் அவருடைய நண்பர் சாமுவேல் ஆகியோரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து விக்கி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி விரைந்து சென்ற குடும்பத்தினர் விக்கி மற்றும் சாமுவேலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணமூர்த்தி, ஜெயவேலு, விநாயகம், சின்னராசு மற்றும் ராமு ஆகியோர் விக்கி மற்றும் சாமுவேலை அரிவாளால் தாக்கியது தெரியவந்தது. இதில் ராமுவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மற்ற குற்றவாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.