ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
கடலூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் சிவா தலைமையில் 53 ஓட்டுநர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தரையில் உட்கார்ந்து குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இத்தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் உங்கள் பிரச்சினை குறித்து புகார் மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தார்.
இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கடலூர் தேவனாம்பட்டு சில்வர் பீச், பெரியார் அரசு கலைக் கல்லூரி, பாடசாலை பிள்ளையார் கோவில் ஆகிய இடங்களில் ஆட்டோ நிறுத்தம் 11-ஐ ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் என்ற பெயரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து நாங்கள் கடந்த 30 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றோம்.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் தனது உறவினருடன் சேர்ந்து 11- வது ஆட்டோ நிறுத்தத்தை தாங்கள் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறோம். எனவே அங்கே ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என்று கூறி எங்களிடம் பிரச்சனை செய்து வருகின்றார். அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாங்கள் நிறுத்தி வந்த ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
இதனையடுத்து அந்த மனுவை பெற்றுக்கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி கொடுத்தார். இதை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.