ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாதம் பட்டியிலிருந்து சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் நோக்கி டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுரிபாளையம் கவுண்டர் வீதிப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பிரபாகரன், இசக்கிமுத்து, கலைவாணன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவரான கௌதம் என்பவரை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.