தெலங்கானா ஹனுமகொண்டா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.
தெலுங்கானா ஷியாம்பேட்டை மண்டலத்திலுள்ள மந்திரபேட்டா கிராமம் அருகில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது. இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து 4-வது நபர் வாரங்கலிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொழிலாளர்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்வாறு விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் பெண்கள் ஆவர். இவர்களில் 3 பேர் மஞ்சுளா, விமலா, ரேணுகா என்பது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் காயமடைந்தவர்கள் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் உள்ளூர் எம்எல்ஏ ஜி.வெங்கட்ரமணா ரெட்டி மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்துப் பேசினார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பாக தலா ரூபாய் 75 ஆயிரமும், தனிப்பட்ட முறையில் தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவியும் அறிவித்தார்.