ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இது பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்கிறோம் என கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் பட்சத்தில் நீதிமன்றம் இதற்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆணவக்கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் அதுபோல இனி செய்யக்கூடாது என எண்ண வேண்டும் என்றால் தண்டனைகளை மிகவும் கடுமையாக வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆணவக் கொலையை பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் கணக்கில் எடுக்க வேண்டும் எனவும் அதற்கான தண்டனை அதிகமாகும் பட்சத்தில் தான் குற்றங்கள் குறையும் எனவும் கூறியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆணவக்கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக சிறப்பு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே குற்றம் புரிந்து தண்டனை பெற வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. வருங்காலத்தில் ஆணவக்கொலைகள் என்ற ஒன்று தமிழ்ச்சமூகத்தின் நடக்கவே கூடாது என அவர் கூறியுள்ளார்.