பெங்களூரில் பெண் ஒருவர் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டியதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் வசிக்கும் அவினாஷ் என்ற 24 வயது இளைஞர் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவிநாஷின் சகோதரர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவினாஷை சிலர் தற்கொலை செய்ய தூண்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஹனி டிராப் கும்பல் தான் அவினாஷை தற்கொலைக்கு தூண்டியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதாவது அவிநாஷ் எம்பிஏ பட்டதாரி ஆவார். இவர் முக நூலின் மூலமாக நேகா சர்மா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அதன் பின்பு இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேச தொடங்கியபோது ஆபாசமாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஆடைகளின்றி நிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசியுள்ளார்கள்.
அப்போது நேஹா, அவினாஷின் நிர்வாணமான வீடியோ காட்சிகளை பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அவினாஷை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன அவினாஷ் 21,000 ரூபாய் கொடுத்திருக்கிறார். மேலும் அவரிடம் 30,000 தருமாறு மிரட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் அவினாஷ் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.