திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கண்மாயின் கரையோரத்தில் கோட்டை கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதன்படி கருப்பண்ணசாமி கோவில் ஆடி மாத திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு இரவு 7 மணி முதல் கட்ட பூஜையுடன் திருவிழா தொடங்கியுள்ளது.
அதன் பின் ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக நேர்ந்து விட்டிருந்த ஆடுகள் கோவில் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டு கட்டப்பட்டிருந்தது. அதன் பின் அந்த ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக பலியிடப்பட்டது. மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டது. அதன் பிறகு நள்ளிரவு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து விடிய விடிய ஆட்டு இறைச்சி சமைக்கப்பட்டு அதிகாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை திருவிழாவிற்காக கிராம மக்கள் 15 நாட்கள் கடும் விரதம் இருந்துள்ளனர். விராலிப்பட்டியில் உள்ள ஊர் கோவில் சோத்து சாமி கோவில் போன்றவற்றிற்கு சென்று பெண்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர். இந்த விழாவில் நிலக்கோட்டை போலீஸ் துணை சுகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.