பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் இருக்கும் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பஞ்சு சம்பந்தமான பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி அமைந்துள்ளது. இந்தப் பெட்டியில் பக்தர்களின் கனவில் தோன்றும் பொருள்கள் வைக்கப்படும். அதாவது முருகப் பெருமான் பக்தர்களின் கனவில் தோன்றி ஒரு பொருளை கூறுவார். அந்த பொருளை கோவில் பூசாரியிடம் தெரிவித்து பூக்கட்டி பார்க்கப்படும். இதனையடுத்து அந்தப் பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.
இந்தப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் உலகத்தில் நடைபெறும் ஏதோ ஒரு சம்பவத்தை குறிப்பிடும். இது நன்மையாகவும் அல்லது தீமையாகவும் இருக்கலாம். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாச்சியம்மாள் என்ற பெண் பக்தரின் கனவில் தோன்றிய இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி போன்ற பொருள்கள் தற்போது பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பருத்தி ஆடைகளின் விலை உயர்வு அல்லது சரிவு ஏற்படலாம் என பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அடுத்தபொருள் வைக்கப்படும் வரையில் பருத்தி பஞ்சு, இலவம் பஞ்சு, சோளி ஆகிய பொருட்கள் தொடர்ந்து பூஜையில் இருக்கும்.