நாம் அனைவரும் வாழ்க்கையை வாழ்வதற்காக பல நெறிமுறைகளை நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் நமக்காக வரையறுத்துக் கொடுத்துவிட்டு தான் சென்றுள்ளார்கள். அதில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான் இந்த சாணக்கியர்.
சாணக்கியர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்.? ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும்.? என்று பல விஷயங்களை நமக்காக வரையறுத்துக் கொடுத்துள்ளார். இப்படி இருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் இப்படி இருந்தால் நமது நாடு சிறப்பாக அமையும் என்று அவ்வளவு அருமையாக அழகாக ஒவ்வொரு எழுத்திலும் வடிவத்திலும் வரையறுத்துக் கொடுத்து சென்றுள்ளார்.
சாணக்கியர் எழுதிய அந்த புத்தகத்தை எடுத்து நான் படித்த அந்த நிமிடம் உங்கள் அனைவருக்காகவும் அவற்றை பகிர வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது. அவற்றில் நான் படித்தது, எனக்கு பிடித்தது மிக முக்கியமான 20 ரகசியங்கள். “வாழ்வை நாம் வாழ நமக்காக” சாணக்கியர் கொடுத்த பொன்மொழிகள். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான உண்மைகள் .
1. ஏமாற்றும் மனைவி, கணவன், போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது. இது நிச்சயம் ஒருநாள் மரணத்தை தரும்.
2. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே சேமிக்க வேண்டும்.
3.வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து வரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், துரதிர்ஷ்டமான காலத்திலும் நாம் அவர்கள் யார் என்பதை அறியலாம்.
4. ஆறு கூரிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், ஒருநாளும் நம்பக்கூடாது.
5. ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றைப் பற்றி அறிவாளி எவரும் வெளியில் சொல்ல மாட்டான்.
6. அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான் .
7. ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது சொல்லாமலும், கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் நாம் செல்லக்கூடாது.
8. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடில் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
9 . உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 முதல் 15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
10. கற்பது பசுவை போன்றது அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும். அது நம் தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும். ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக இருக்கவேண்டாம்.
11. கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவும் பயனற்றது, அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
12. காமத்தை விட கொடிய நோய் ஏதுமில்லை, அறியாமையை விட கொடிய எதிரி ஏதுமில்லை, கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை.
13. எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு, பணம் இருப்பவனை தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
14. பிறவிக் குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது.
15. பணம் பெருமை செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கும் பாவம் தெரியாது. பேராசை கொண்டவனை பரிசு கொடுப்பதன் மூலமும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
16. ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, தர்ம காரியங்கள் ஆகியவற்றை செய்வதில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
17 . யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள், ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
18. எல்லா காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்கள். வளைந்து நெளிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
19. அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் இல்லாது போனால் வேறு இடத்திற்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள், இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. சிங்கத்தின் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்பு யானை தந்தங்கள் கிடைக்கலாம். நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலு துண்டு எலும்புகள் தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
இவை அனைத்தும் சாணக்கியர் நீதியில் இருந்து எடுக்கப்பட்ட பல வாழ்வியல் நெறிகளுக்கு சம்பந்தமான உண்மை கூற்றுகள்