வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த தாயை போலீசார் மகனுடன் சேர்த்து வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் ஈச்சம்பட்டி பகுதியில் கல்கி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இவருக்கு வயது 75 ஆகும். இவருடைய கணவர் 20 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதன்பின்பு மூதாட்டியை அவருடைய மகன் கவனிக்காததால் அவர் ஆதரவின்றி ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றார்.
இதனை அடுத்து வயதான காலத்தில் மூதாட்டிக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து வீட்டின் உரிமையாளர் அவரை காலி செய்யும்படி கூறியுள்ளார். இந்த நிலையில் மூதாட்டி தன்னை கவனிக்காத மகனிடம் தான் சேர்த்து வைத்த பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் மூதாட்டியின் மகனான மாரிமுத்துவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
மேலும் மூதாட்டியிடம் போலீசார் மகனுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மூதாட்டியோ “என்னால் யாருக்கும் கஷ்டம் வேண்டாம் நான் கஷ்டப்பட்டு சேர்த்த பொருட்களை என் மகன் அனுபவித்தால் மட்டும் போதும்” எனக் கூறி உள்ளார். இதனை கேட்டதும் போலீசார் மாரிமுத்துவையும் அவருடைய மனைவி அழைத்து அறிவுரை கூறியுள்ளனர். அதன் பின் அவர்களுடன் மூதாட்டியை அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக மூதாட்டி போலீசாருக்கு நன்றி கூறியுள்ளார். இந்த சம்பவம் காண்போரை கண் கலங்க செய்துள்ளது.