இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆதார் அட்டை குறித்த முக்கிய வழிமுறைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி ஆதார் அட்டை நகல்களை கிடப்பில் போட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆதார் எண்ணை சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களில் வெளியிடக்கூடாது. ஆதார் எண்ணை மற்றவர்களுடன் பகிரும்போது கவனமாக இருக்கவும் ஓடிபி யாருடனும் பகிர வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆதார் அட்டை வைத்திருப்பவரும் தனது மின்னஞ்சலை ஆதாருடன் இணைக்க வேண்டும். ஆதார் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் 1947 என்ற இலவச எண்ணை 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.