ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்ததால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையையில் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் என்பவரின் மகன் ஜீவானந்தம் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பழுது சரி செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுவது வழக்கம். ஆனால் இது அவருடைய மனைவிக்கு பிடிக்காததால் அவரை கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனால் சுகன்யா கோபித்துக்கொண்டு தனது குழந்தையுடன் தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஜீவானந்தம் தனது தொழில் பங்குதாரரான நண்பருக்கு கொடுக்க வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி மொத்த பணத்தையும் இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கோவையை அடுத்த மாச்சாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஜெயச்சந்திரன் (32). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பெற்றோர் இல்லாததால், தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். ஏற்கனவே கடன் தொல்லை இருந்த நிலையில், மேலும் ஆதார், பேன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து ஆன்லைன் மூலம் கடன் வாங்கி ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார்.
இதனால் மன விரக்தியடைந்த ஜெயச்சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல கோவை, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் ரம்மி விளையாட்டால் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.