ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நாளை தொடங்க இருந்த அகழாய்வு பணிகள் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு நடந்த 5ம் கட்ட அகழாய்வில் 33 குழிகள் தோண்டப்பட்டு இரட்டை மற்றும் வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் என 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு பிப்.19-ம் தேதி 6ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதில் மூன்றரை அடி ஆழத்தில் சுண்ணாம்பு சுவர் ஒன்று முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. இச்சுவர் ஒரு அடி வரை இருந்தது. இதனை தொடர்ந்து 4 அடி ஆழத்தில் 2 அடுக்குகள் கொண்ட தரை தளம் தென்பட்டது. தரை தளம் கடந்த 5-ம் கட்ட தரை தளம் போல செங்கல் கட்டுமானத்திற்கு மேலே களிமண் பூச்சுடன் காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நாளை அகழாய்வு பணிகள் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நாளை தொடங்க இருந்த அகழாய்வு பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்த அகழாய்வு பணிகள் மார்ச் 25ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.