தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் சிவகளை மற்றும் கோர்க்கை பகுதிகளில் அடுத்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ஆம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது. இதேபோல் சிவக்களையிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இந்த அகழ்வாராய்ச்சி கடந்த 1-ம் தேதி முடிவு பெற்றது. இதில் ஆதிச்சநல்லூரில் 27 முதுமக்கள் தாழியும், சிவக்களையில் 34 முதுமக்கள் தாழியும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இந்த இடங்களில் தமிழ் பிராமி எழுத்துகள் சுடுமண்ணால் ஆன வடிகால் குழாய்களும் மண் பானைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவைகள் அனைத்தும் கார்பன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப் பெற்ற பின்னர் தான் அகழ்வாராய்ச்சி பற்றிய அறிக்கை வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டும் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கூடுதலாக கோர்க்கை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.