தாய்லாந்தில் 5 வயதாகும் தங்கள் இரட்டை குழந்தைகள் இருவருக்கும் பெற்றோரே திருமணம் செய்துவைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் ஒவ்வொரு நிமிடமும் எங்கோ ஓரிடத்தில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வகையில் தாய்லாந்தில் வசிக்கும் Weerasak (31) மற்றும் Rewadee (30) என்ற தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த வேடிக்கையான நிகழ்விற்கு வித்தியாசமான காரணமும் கூறியுள்ளார்கள்.
அதாவது புத்த மத நம்பிக்கையின்படி ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இரட்டையர்களாக பிறந்தால், அவர்கள் காதலர்களாக பூர்வ ஜென்மத்தில் இருந்திருப்பார்கள் என்றும் அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் முன்பே அவர்களின் உறவு முறிந்து போயிருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதனால் ஆசை நிறைவேறாத அவர்கள் இந்த பிறவியில் இரட்டையர்களாக பிறந்துள்ளார்கள். எனவே அவர்களின் ஆசையை நிறைவேற்றவில்லை எனில் விபரீதம் நடக்கும். இதனால் நம்மால் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக அவர்களை சேர்த்து வைத்தால் துன்பம் நீங்கி விடும். இதனால் தான் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் முடித்தோம் என்று கூறியுள்ளனர்.
அதாவது தற்போது ஐந்து வயதாகும் அக்காள், தம்பியான இரட்டை குழந்தைகள் Washiraawit Bee Moosika மற்றும் Rinraada Breem ஆகிய இருவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. மாப்பிள்ளை ஊர்வலம், மேளதாளங்களோடு உறவினர்கள் சீர்வரிசை உட்பட ஊரார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.