திருநெல்வேலியில் இரட்டைக் கொலை செய்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் கூலித் தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் செல்வம் அவருடைய மனைவி மஞ்சு என்பவருடனும் மூன்று குழந்தைகளுடனும் அவரது மாமனாரான கூலித்தொழிலாளி புலேந்திரன் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தங்கியுள்ளார். இதற்கிடையே செல்வம் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு மனைவி மஞ்சுவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனை கண்டித்த மாமனாருக்கும், மருமகனுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மாமனாரை செல்வம் தனது குழந்தைகளை தூக்கக் கூடாது என்று சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புலேந்திரன் அரிவாளால் செல்வத்தை தாறுமாறாக தாக்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மஞ்சு உள்ளே சென்று தடுக்க முயன்றதால் அவரையும் வெட்டியுள்ளார். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்கையில் புலேந்திரன் தனது ஆத்திரத்தால் தன்னுடைய பேரக்குழந்தைகளை அனாதையாக்கி விட்டேன் என்று கதறி அழுதுள்ளார்.