மகாராஷ்டிரா மாநிலமான பீட் பகுதியில் சச்சின் கிட்டே என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த ஸ்கூட்டர் 6 நாள்களில் பழுதடைந்து ஓடாமல் நின்றுள்ளது. இதனால் சச்சின் ஓலா நிறுவனத்தை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார். அப்போது ஓலா நிறுவனமானது மெக்கானிக்கை அனுப்பி செக் செய்வதாக சச்சினிடம் தெரிவித்துள்ளது. ஆனால் சொன்னபடி யாரும் வந்து ஸ்கூட்டரை சரிசெய்யவில்லை. இதையடுத்து சச்சின் மீண்டும் கஸ்டமர் சர்வீசை தொடர்புகொண்டு புகார் தெரிவித்து வந்துள்ளார். எனினும் அவர்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. ஆகவே தனக்கு தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த சச்சின், தன் ஸ்கூட்டரில் கழுதை ஒன்றை கட்டி, ரோட்டில் ஊர்வலம் சென்று உள்ளார்.
மேலும் இந்த ஊர்வலத்தின்போது தன் ஸ்கூட்டரில் ஓலா ஒரு மோசடி நிறுவனம், அங்கு வாகனங்களை வாங்காதீர்கள் என்று பேனர் ஒன்றை வைத்து சென்றுள்ளார். அப்போது பல பேர் அதனை வீடியோ எடுத்த சூழ்நிலையில், இந்த விவகாரம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரை வாங்க கடந்த வருடம் செப்டம்பர் மாதமே சச்சின் முன்பதிவு செய்ததாகவும், ஆனால் டெலிவரி இந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி தான் வந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு வாங்கி வெறும் 6 நாளில் வண்டி பழுதடைந்ததால், நுகர்வோர் ஆணையம் வரை சென்று புகார் அளிக்க சச்சின் முடிவெடுத்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் ஓலா நிறுவனத்தின் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்பாக அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் நாடு முழுதும் எலெக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து விபத்துக்களாகும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. இது போன்ற விபத்தில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. எனவே இதுபோன்ற தொடர் புகார்கள் எதிரொலியால் சந்தையிலுள்ள தன் 1,441 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இவ்வாறு ஓலாவைப் போன்று ஜிதேந்திரா, ஓகினவா போன்ற நிறுவனங்களும் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்ர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதற்கிடையில் எலெக்ட்ரிக் ஸ்கூடர்களின் தரம் சார்ந்து எழும் புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.