ஆத்தூரில் உள்ள செம்பட்டியில் நெல்லை கொள்முதல் செய்வதில் பாரபட்சம் பார்ப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி ஆத்தூரில் சென்ற மார்ச் மாதம் 6 ஆம் தேதி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஒரு மாதமாக நெல்களை அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகின்றார்கள். கொள்முதலை ஒரு சில பகுதியில் இருந்து உடனடியாகவும் மற்றவர்களிடம் தாமதிப்பதாக விவசாயிகள் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் நெல்கள் மழையில் நனைந்து முளைத்து நாற்றுக்களாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் நெல்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை வந்து விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் இருக்கின்றனர். இதுபற்றி விவசாயிகள் கூறுவதாவது நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாய சங்கத்தினர் மற்றும் அதிகாரிகள் கூட்டணி வைத்துக்கொண்டு பாரபட்சம் பார்க்கிறார்கள். எங்கள் நெல் திறந்தவெளியில் கொட்டிவிட்டு கொள்முதல் செய்வதற்கு காலதாமதம் செய்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது பற்றி அமைச்சர் பெரிய ராமசாமி அவர்களிடம் புகார் மனு அளிக்க முடிவு செய்து இருக்கின்றோம். மாவட்ட கலெக்டர் விசாகன் இதற்கு நடவடிக்கை எடுத்து முறைகேடுகளை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.