திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மலை அடிவாரப் பகுதிகளை அதிக அளவில் கொண்டது என்பதால் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், நாயோடே அணை, கோம்பை அணை என மூன்று அணைகள் மற்றும் ஏராளமான மலைக்குன்றுகள் ஆத்தூர் தொகுதியில் உள்ளன. ரெட்டியார் சத்திரத்தில் உள்ள கதிர் நரசிங்க பெருமாள் கோவில், கனிவரையிலுள்ள கோபிநாத சாமி மலை கோவில் ஆகியவையும் புகழ் பெற்றவையாகும்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் திமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 முறையும் காங்கிரஸ் இருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆண்களைவிட சுமார் 10,000 பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட ஆத்தூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,90,698 ஆகும்.
அய்யம்பாளையத்தில் விளையும் தேங்காயில் அதிக எண்ணெய் சத்து உள்ளதால் தமிழக அளவில் பெயர் பெற்றது. எனவே இந்தப் பகுதியில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல் சின்னாளபட்டி பகுதியில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்கு நெசவு பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை ஆக உள்ளது. ஆத்தூர் தொகுதியில் மூன்று அணைகள் இருந்தாலும் ரெட்டியார்சத்திரம் சுற்றியுள்ள பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கன்னிவாடியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆத்தூர் தொகுதியில் அரசு கல்லூரி உருவாக்கப்பட வேண்டும் என்பதும், கன்னிவாடியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை. திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கையாகும். செம்பட்டியில் காய்கறி வியாபாரிகளுக்கு சந்தை அமைத்து தரவேண்டும், ஆத்தூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தொகுதி மக்களின் கோரிக்கையை பட்டியல் நீள்கிறது.