சேலம் மாவட்டத்தில் வசிஷ்ட ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளதால் ஆற்றூர் என அழைக்கப்பட்டு, பின்னர் ஆத்தூர் என மாறியதாக கூறப்படுகிறது. ஆத்தூர் தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு மரவள்ளி, பருத்தி, மஞ்சள், மற்றும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 4 முறை தொகுதியில் கைப்பற்றியுள்ளனர்.
சுதந்திரத்திற்கு பிறகான முதல் இரண்டு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் சின்னதம்பி. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,53,800. மேட்டூர் காவிரி உபரி நீரை ஆத்தூர் வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. ராமநாயக்கன் பாளையத்தில் கல்லாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும், அரசு பாலிடெக்னிக் மற்றும் பெண்கள் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க புற வழி சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.
ஆத்தூரிலிருந்து பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கைகளுள் ஓன்று. ஆத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். நீண்ட கால கோரிக்கைகளுடன் வாக்கு பதிவுக்கான நாளை தொகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.