ஆந்திர மாநிலத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் அம்மா நிலங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பள்ளி கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 9 மற்றும் 10 வகுப்புகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக நவம்பர் இரண்டாம் தேதி ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இதுபற்றி அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும், 9,10,11,12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் மாதம் இரண்டாம் தேதியும், 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 24ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பள்ளிகள் அனைத்தும் அரைநாள் மட்டுமே செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.