ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிச்சர்லபள்ளி கிராமத்தில் அங்கையா- அருணா மணமக்களின் திருமணச்சடங்கு நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமகன் அங்கையா பெண் போல சேலை அணிந்தும், மணமகள் அருணா ஆண் போல் குர்தா பைஜாமா உடை அணிந்தும் கிராம தேவதை கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
அந்த மாவட்டத்தில் கும்மா என்ற வீட்டுப்பெயர் கொண்ட குடும்பங்களில் இதுபோன்ற பாரம்பரிய முறை கடைபிடிக்கப்படுகிறது. பாரம்பரியமாக பல்வேறு ஆண்டுகளாக இந்த முறையை அந்த கிராம மக்கள் கையாண்டு வருகின்றனர். மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் திருமணத்தன்று முறைப்படி பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும். இந்தியாவில் நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கிராமங்களில் இதுபோன்ற திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.