நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. அதில் ஆக்ஸிஜன் விவகாரத்தில் பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை போன்று தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது என்று அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.